கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர், நடத்துனரின் உரிமம் தற்காலிக ரத்து
|பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது.
கடலூர்,
கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை விருத்தாச்சலத்திற்கு புறப்பட இருந்த தனியார் பேருந்தில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணிகளிடம் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறிஞ்சிப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் நடத்திய விசாரணையில், பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் உத்தரவிட்டார்.
மேலும் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்திச் செல்ல வேண்டும் எனவும், பயணிகளிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.