கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உர உற்பத்தி கிடங்குகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு
|கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உர உற்பத்தி கிடங்குகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை,
சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (உரம்) மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த 22-ந் தேதி, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள உர உற்பத்தி நிறுவனங்களின் சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 2 மொத்த உர விற்பனை கடைகளில் புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வித்தியாசமாக இருப்பில் இருந்த 95.730 டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டது. மேலும், உர உற்பத்தி நிறுவனங்களின் உர சேமிப்பு கிடங்குகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணைக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ராக் பாஸ்பேட் உரங்கள் இருப்பு கண்டறியப்பட்டு மொத்தமாக 3,078.800 டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, உரக்கட்டுப்பாட்டு ஆணையில் பட்டியலிடப்படாத இடுபொருள் 22.250 டன் இருப்பில் உள்ளதற்கும் விற்பனை தடை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், லேபிளில் அடக்கப் பொருட்களின் அளவு குறிப்பிடப்படாத 14.820 டன் உயிர் ஊக்கிக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள உயிர் ஊக்கி தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பில் உள்ள 12.600 மெட்ரிக் டன் உயிர் ஊக்கிக்கும் விற்பனை தடை வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.