< Back
மாநில செய்திகள்
மாசடைந்த நீரால் வீடுகளை காலி செய்யும் மக்கள்
கடலூர்
மாநில செய்திகள்

மாசடைந்த நீரால் வீடுகளை காலி செய்யும் மக்கள்

தினத்தந்தி
|
9 Aug 2022 5:09 PM GMT

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தினசரி ஒவ்வொரு வார்டுகளின் குறைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) 36-வது வார்டில் உள்ள குறைகள் குறித்து பார்ப்போம்


கடலூர் மாநகராட்சி 36-வது வார்டில் அழகானந்தா நகர், மகாலட்சுமி நகர், செல்லங்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, ஏணிக்காரன் தோட்டம், செல்லங்குப்பம் புதுக்காலனி, புதுநகர் காலனி, வெங்கடேச பெருமாள் நகர், புட்லாயி அம்மன் நகர், அஸ்வத் கார்டன், காந்தி நகர், செல்லங்குப்பம் சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

மாநகராட்சியில் உள்ள பிற வார்டுகளை காட்டிலும் இங்கு தான் அதிகளவில் வீடுகள் உள்ளன. இதில் செல்லங்குப்பம் சுனாமி நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் காலியாகவே உள்ளன. காரணம், கடல் அருகில் இப்பகுதி அமைந்துள்ளதாலும், அந்த பகுதியை சுற்றிலும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மாநகராட்சி மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், இங்கு வசித்த பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு, வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

திரும்பிய பக்கமெல்லாம் கழிவுநீர்

இதுதவிர இந்த வார்டில் வடிகால் வாய்க்கால் இருந்தாலும் முறையாக தூர்வாரப்படாததால் குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியே நிற்கிறது. அதாவது இந்த வார்டுக்குள் நுழைந்தாலே, கடும் துர்நாற்றம் தான் வீசுகிறது. அந்த அளவுக்கு அனைத்து பகுதிகளிலும் தூர்ந்துபோன வாய்க்காலாலும், சில இடங்களில் வடிகால் என்பதே இல்லாததாலும் திரும்பிய பக்கமெல்லாம் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் சுமார் ½ கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக வடிகாலில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், விஷஜந்துக்கள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. மேலும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குடிநீர் வினியோகம்

மழைக்காலங்களில் இப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் மற்றும் கழிவுநீர் அருகில் உள்ள உப்பனாற்றில் வடிகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உப்பனாறுக்கு தண்ணீர் செல்லும் வடிகால் தூர்ந்து போனதால் மழைநீர் வடிய வழியின்றி குயிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இந்த வார்டு மேடான பகுதியாக இருப்பதால், மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகமும் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பணம் கொடுத்து தான் குடிநீர் வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர்.

பாழடைந்த பொது கழிவறை

இதுகுறித்து அந்த வார்டை சேர்ந்த ராமு என்பவர் கூறுகையில், செல்லங்குப்பம் புதுநகரில் இருந்த பொது கழிவறை முறையான பராமரிப்பின்றி தற்போது பாழடைந்து கிடக்கிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிதாக பொது கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும் வார்டில் அனைத்து பகுதிகளிலும் சாலை சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து செல்லும் வயதானவர்கள் முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பழுதான மின்மோட்டார்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் வார்டில் முக்கிய பிரச்சினையாக உள்ளது கழிவுநீர் தான். கழிவுநீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்டது போல் வடிகால் உள்ளது. அதாவது இங்குள்ள வடிகாலால் எந்த பிரயோஜனமும் இல்லை. வடிகாலை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. அதனால் மழைக்காலம் தொடங்குவதற்குள் அனைத்து வடிகாலையும் தூர்வார வேண்டும். பெரும்பாலான வீடுகளில் குடிநீர் இணைப்புகள் என்பதே இல்லை.

இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். கிழக்கு தெருவில் உள்ள மினி குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அதனை பழுதுபார்த்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அந்த மினிகுடிநீர் தொட்டியும் சேதமடைந்து வருகிறது. அதனால் அதனை அகற்றிவிட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனர்.


வார்டு கவுன்சிலர் என்ன சொல்கிறார்...

36-வது வார்டு கவுன்சிலர் (சுயேச்சை) ராஜலட்சுமி கூறுகையில், எங்கள் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். சமுதாய கூடம், ரேஷன் கடை கட்டிடம், வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். சாலைகளை சீரமைத்து தர வேண்டும். ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் சில தெருக்களில் மின்விளக்குகள் கிடையாது. அதனால் தெருமின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என மாநகராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் எனது கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்