< Back
மாநில செய்திகள்
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சவுக்கு சங்கர் மீண்டும் கைது
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீண்டும் கைது

தினத்தந்தி
|
11 Nov 2022 6:45 PM GMT

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் முதுநகர்,

நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, சமூக வலைத்தள பிரபலம் சவுக்கு சங்கர் மீது கோர்ட்டு தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அதில், சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி, சவுக்கு சங்கர் சார்பில் வக்கீல் ஜாக்ரதி சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை நடைபெறும்வரை, சவுக்கு சங்கர் எவ்வித வீடியோ பதிவையும் உருவாக்கி அவற்றை யுடியூபில் பதிவேற்றக் கூடாது. மேலும் கருத்துகளையும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார், நிலுவையில் உள்ள வழக்குகளில் சவுக்கு சங்கா் கைது செய்யப்படுவதாக கூறி, அதற்கான ஆவணங்களை கடலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலராக பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்