கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி
|செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில் அணு உலை அமைந்துள்ளது. அதி முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கல்பாக்கம் அணுஉலையில் நேற்று பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் ஈடுபட்டு இருந்தார்.
பணி முடிந்து துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக அணுமின் நிலைய ஒப்பந்த பேருந்தில் கிரண் உள்பட தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரவி கிரண் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பேருந்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவி கிரண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.