செங்கல்பட்டு
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச்செயலாளர் ஆய்வு
|வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச்செயலாளர் ஆய்வு
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் அமைந்துள்ளது. தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று காலை உயர்நிலை மாணவர் பாதுகாப்பு நிறுவனத்துக்கு நேரில் வந்து அந்த நிறுவனத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள விலங்குகளின் டி.என்.ஏ. பரிசோதனை மையம், விலங்குகளின் பிரேத பரிசோதனை மையம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடங்களையும் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக கடத்த, விற்க முயன்ற போது வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள், நரி பற்கள், புலிப்பற்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார்.
சபாரி திட்டம்
முன்னதாக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் மரக்கன்று நட்டார். பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகள் ஆஸ்பத்திரிக்கு எதிரே அமைந்துள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு சென்று மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 2 சிங்கங்கள், சிறுத்தை போன்றவற்றை அதனுடைய கூண்டுக்கு அருகில் சென்று பார்த்தார்.
வண்டலூர் உயிரில் பூங்கா மறுவாழ்வு மையம் அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவதற்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் வண்டலூரில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். அந்த இடத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்ற தலைமைச்செயலாளர் பூங்கா வளாகத்திற்குள் உள்ள ஓட்டேரி ஏரியை ஆய்வு செய்தார். முன்னதாக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் தமிழக அரசின் வனத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார்.
ஆமை குஞ்சுகள்
முன்னதாக வனத்துறை சார்பாக சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட ஆமை பொறிப்பகத்தில் உள்ள ஆமை குஞ்சுகளை கடலில் விட்டார். பின்னர் பள்ளிக்கரனை சுற்றுச்சூழல் பூங்கா மேம்பாட்டு பணிகளையும், வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்படவுள்ள மின் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர் உதயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.