< Back
மாநில செய்திகள்
இடிந்து விழும் நிலையில் சத்துணவு கூடம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

இடிந்து விழும் நிலையில் சத்துணவு கூடம்

தினத்தந்தி
|
12 Oct 2023 6:45 PM GMT

மயிலாடுதுறை அருகே மல்லியம் அரசு உதவி பெறும் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள சத்துணவு கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்துணவு கூடம்

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 260 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு சத்துணவு தயாரிப்பதற்கு பள்ளியில் சத்துணவு கூடம் உள்ளது. இந்த சத்துணவு கூடம் தற்போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சத்துணவு கூட கட்டிடத்தின் மேல் கூரைகளில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதன் உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மேலும் மழை காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கை

சில நேரங்களில் உணவு தயாரிக்கும் போது காரைகள் பெயர்ந்து உணவு பொருட்களிலும் விழுந்து விடுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கட்டிடம் பலம் இழந்து காணப்படுவதால், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த சத்துணவு கூடத்தை உடனே அரசு சீரமைக்க வேண்டும். அதுவரை தற்காலிகமாக வேறொரு இடத்தில் சமையல் கூடம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்