சென்னை
ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போன் பறிப்பு
|ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி மேற்கு காந்தி நகர் நாசர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). இவர் நேற்று காலை ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் திருவண்ணாமலை செல்வதற்காக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சற்று தூரத்தில் அதே வழியில் சாலையில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த ஆவடி சி.ஆர்.பி.எப். குடியிருப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். வீரரான கலையரசன் (65) என்பவரிடம் விஜயகுமாரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே மர்ம நபர்கள் அவரிடமும் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஆவடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதேபோல் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் வீட்டின் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக போரூரை சஞ்சீவ் (20), சஞ்சய் (20), ஆகிய இரட்டை சகோதரர்களை கைது செய்தனர்.