< Back
மாநில செய்திகள்
சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் - உள்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் - உள்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
9 April 2023 12:53 PM IST

சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

சி.ஆர்.பி.எப். என்பது மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த நிலையில், சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன, இருப்பினும் தேர்வில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது.

எனவே சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்