கடலூர்
பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
|தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்வதற்காக பஸ், ரெயில் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்து வேலை பார்க்கும் தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர். மேலும் கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்களும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிக்கின்றனர்.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 174 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சீரான இடைவெளியில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளும், நேரடியாக வந்த பயணிகளும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். நேற்று முன்தினத்தை காட்டிலும், நேற்று பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நிரம்பி வழிந்த கூட்டம்
குறிப்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக திருச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று மாலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகில் பஸ்கள் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறியதை காண முடிந்தது. ஆனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப எந்தவொரு பஸ் நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் அடிப்படை வசதிகள் என்பதே இல்லை. இதுபற்றி பயணிகள் கூறிய கருத்துகள் பற்றிய விவரம் வருமாறு:-
ஆக்கிரமிப்புகளால் அவதி
கடலூர் கணேசன்:- சென்னை செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கிறேன். அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதால், என்னால் பஸ்சில் ஏற முடியவில்லை. தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்தால், பஸ் நிலையத்தில் உள்ள இரண்டு மினிகுடிநீர் தொட்டிகளும் குடிநீர் இன்றி காட்சிக்காக தான் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் பஸ் நிலையத்தில் இல்லை. மழை பெய்தால் ஒதுங்குவதற்கு கூட இடவசதி இல்லை. நடைபாதை அனைத்தும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ்களுக்கு இடையே தான் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. அதனால் கடலூர் பஸ் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
குடிநீர் வசதி
சிதம்பரம் கமல்:- சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் புத்தாடைகள் மற்றும் ஜவுளிகள் வாங்குவதற்காக சுற்று வட்டார கிராம மக்களும் நகருக்குள் திரண்டு வந்ததால், நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன. போக்குவரத்து நெரிசலால் சிதம்பரம் வண்டிக்கேட்டில் இருந்து பஸ் நிலையத்திற்குள் செல்லவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அங்கு சென்றால் குடிநீர் வசதி ஏதும் இல்லை. இதனால் அடுத்து வரும் பண்டிகை காலங்களிலாவது பயணிகள் நலன்கருதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பயன்படுத்த முடியாத கழிவறை
விருத்தாசலம் ஆலடி சமீர்:- மும்பை, டெல்லி, சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சேலம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் ஜங்ஷனாக விருத்தாசலம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அதனால் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்வதற்காக விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் இங்குள்ள ரெயில்வே ஜங்ஷனில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடையில் போதுமான நிழற்குடைகள் அமைக்கப்படாததால் பயணிகள் ரெயிலுக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. முதலாவது நடைமேடையில் சேலம் செல்லும் ரெயில் சரியாக நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல், தள்ளியே நிறுத்தப்படுவதால் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் ரெயில் பயணத்தையே தவிர்த்து விடலாமோ என எண்ணுகின்றனர்.
இரண்டு மற்றும் 3-வது நடைமேடையில் எந்த ரெயில் பெட்டி, எந்த இடத்தில் நிற்கிறது என்று அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் இங்கு வரும் பெரும்பாலான பயணிகள் தாங்கள் ஏற வேண்டிய பெட்டிகளில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். அங்கு அமர்வதற்கும் போதுமான வசதிகள் இல்லை. இதனால் ரெயில் வரும் வரை நின்று கொண்டே காத்திருக்கிறோம். 3-வது நடைமேடையில் உள்ள கழிவறை பராமரிப்பின்றி, பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. அதனால் மாவட்டத்திற்கு இணையாக வளர்ந்து வரும் விருத்தாசலத்தில், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன்கருதி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.