< Back
மாநில செய்திகள்
நெருங்கும் தீபாவளி.. புத்தாடை வாங்க தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை
மாநில செய்திகள்

நெருங்கும் தீபாவளி.. புத்தாடை வாங்க தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2022 1:12 PM GMT

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் சென்னை தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் அலைமோதினர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளன.

தீபாவளி என்றாலே ஒவ்வொரு வீட்டிலும் முதலிடம் பிடிப்பது புத்தாடை தான். வேறு எந்தவொரு பண்டிகையின் போதும் இல்லாத அளவுக்கு தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்தாடை வாங்குவது காலம் காலமாக இருந்து வரும் ஒன்றாகும்.

விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் தியாகராயநகர் உள்பட பல்வேறு இடங்களில் புத்தாடை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

புத்தாடை என்றாலே பெரும்பாலானோர் தேர்வு செய்வது தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் தான். ஏராளமான ஜவுளி கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

பல பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வசதியான இடமாக மக்கள் கருதுவது தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் என்பதால் இங்கு இன்று காலை 10 மணி முதல் ஏராளமானோர் குடும்பத்தோடு தியாகராயநகர் பகுதியில் குவிய தொடங்கினர்.

இதன்காரணமாக தியாகராயநகர் பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்த போலீஸ்

கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்த போலீஸ்

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதை பொறுத்தமட்டில் அடுத்ததாக 23-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே உள்ளது. அதற்கு மறுநாளான 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு இன்றைய தினத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்தனர்.

பொதுவாகவே சென்னையை பொறுத்தமட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும். புத்தாடை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததால் தியாகராயநகர், பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவை பொறுத்தமட்டில், அங்கு சென்று வர ரெயில் போக்குவரத்து வசதியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ரெயில்களில் கூட்டம் குறைவாகவே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு புத்தாடை வாங்க குவிந்த மக்களால் மாம்பலம் ரெயில் நிலையம், தியாகராயநகர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருநதது.

நகைகளை பாதுகாக்க போலீசார், பெண்களுக்கு நகை பாதுகாப்பு கவச உடை வழங்கினர்.

நகைகளை பாதுகாக்க போலீசார், பெண்களுக்கு நகை பாதுகாப்பு கவச உடை வழங்கினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜேப்படி திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம், பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகை உள்ளிட்ட பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி அறிவித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா மற்றும் பைனாகுலர் மூலம் ஜேப்படி திருடர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்