கள்ளக்குறிச்சி
புத்தாடை பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்
|கள்ளக்குறிச்சியில் புத்தாடை பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்
கள்ளக்குறிச்சி
தீபாவளி பண்டிகை இன்று(திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் புத்தாடை, பட்டாசு வாங்க கள்ளக்குறிச்சிக்கு படையெடுத்ததால் நகரின் பிரதான சாலைகளில் மக்கள் வெள்ளத்தை காண முடிந்தது. குறிப்பாக சேலம் மெயின்ரோடு, துருகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.
ஒரே நேரத்தில் அதிக மக்கள் திரண்டு வந்ததால் பட்டாசு மற்றும் ஜவுளிக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகை விலை மற்றும் பரிசுகள் அறிவித்து இருந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். அதேபோல் பட்டாசு கடைகளிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ரக பட்டாசுகள் கிப்ட் பாக்சுகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நகரம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.
அசம்பவாவித சம்பவங்களை தடுக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து சுற்றி வந்தனர். பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.