நேப்பியர் பாலத்தில் மக்கள் கூட்டம் - கூடுதல் போலீசார் கண்காணிப்பு
|நேப்பியர் பாலத்தை பார்க்க தினமும் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்னை,
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நேப்பியர் பாலத்துக்கு கருப்பு, வெள்ளை நிறத்தில் செஸ் கட்டங்கள் வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து நேப்பியர் பாலத்தை பார்க்க தினமும் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலத்தில் வரையப்பட்டுள்ள செஸ் கட்டங்களில் நின்று புகைப்படம், செல்பி, வீடியோ எடுக்கிறார்கள். கார்களை பாலத்தில் நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிறம் வந்ததும் மக்கள் நேப்பியர் பலத்தில் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். ஒரு வாலிபர், சாலையின் நடுவில் படுத்தப்படி இருந்து அவரது மனைவி புகைப்படம் எடுத்தார். இரண்டு இளம்பெண்கள் பாலத்தில் நடனமாடுவதை மற்ற நண்பர்கள் வீடியோ எடுத்தனர். சில இளைஞர்கள் தங்களது கார்களை மெதுவாக ஓட்டி சென்று அதனை வீடியோ எடுக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குடும்பமாக பொதுமக்களும், மாணவர்களும் கூட்டமாக திரள்கிறார்கள் என்றனர். நேப்பியர் பாலத்துக்கு தினமும் மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதால் பாலத்தின் இருபுறமும் இரண்டு ரோந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.