< Back
மாநில செய்திகள்
பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

தொடர் விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.



ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மதுரை, நெல்லை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு பயணிகள் அதிகமாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். இதன் காரணமாக பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும் பஸ்சிற்காக குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கோவையில் இருந்து வரும் போது பஸ் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் பொள்ளாச்சியில் பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் கடும் சிரமப்பட்டனர். எனவே பண்டிகை காலங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்தும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கூட்ட நெரிசலை பொறுத்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

மேலும் செய்திகள்