திருவள்ளூர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
|அரசு விடுமுறை நாளையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால், பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால், போதிய அளவு போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, விசேஷ காலங்களில் அதிக அளவு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.