< Back
மாநில செய்திகள்
காணும் பொங்கலையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சென்னை
மாநில செய்திகள்

காணும் பொங்கலையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
18 Jan 2023 2:00 PM IST

காணும் பொங்கலையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றினால் வீடு, மனை, உத்தியோகம், தொழில், திருமணம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் இந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் விடியற்காலை முதலே கோவில் வளாகத்தில் வந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்தநிலையில் நேற்று காணும் பொங்கல் மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வாகனத்தில் வந்ததால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இதேபோல் திருத்தணி முருகன் கோவிலிலும் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் திருத்தணியில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வீதிகள் தோறும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 3-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு படிகள் வழியாக, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.

பின்னர், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு திருத்தணி பெரியதெரு சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து சென்றனர். மாலையில் பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கின்ற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார்.

மேலும் செய்திகள்