புதுக்கோட்டை
தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்
|ஆதனக்கோட்டை பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகின. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தொடர் மின்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து கந்தர்வகோட்டை நகரத்திற்கும், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில வாரங்களாக ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சார வினியோகம் அடிக்கடி நிறுத்தப்படுகின்றது. புதுக்கோட்டை சிப்காட்டில் இருந்து ஆதனக்கோட்டை துணைமின் நிலையத்திற்கு வரும் மின்சாரம் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுவதால் மின்வெட்டு ஏற்படுகின்றது.
இதனால் ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய முடிவதில்லை. கடந்த சில வாரங்களாக ஒரு மணி நேரத்திற்கு பலமுறை என அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு தினமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வினியோகம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
சோளப்பயிர்கள் காய்ந்தன
சோத்துப்பாளையை சேர்ந்த இன்பவள்ளி:- 4 ஏக்கர் சோளமும், ஒரு ஏக்கர் கடலையும் சாகுபடி செய்துள்ளேன். ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். சோளக்கதிர் வந்து முதிர்ச்சியடையும் தருவாயில் சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் மின்வெட்டால் சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் சோளப்பயிர்கள் காய்ந்து பட்டுவிட்டது. கடலை செடிகள் பட்டுவிடும் நிலையில் உள்ளது. சோளம் மற்றும் கடலை சாகுபடிக்காக செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை தொடர்மின்வெட்டால் ஏற்பட்டுள்ளது. என்னை போன்ற விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மின்வெட்டு இல்லாமல் மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை
சொக்கநாதப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்:- வயலில் கடலையும், மல்லிகை பூ, கனகாம்பரம் ஆகியவற்றை இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். தொடர் மின்வெட்டால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை, கிணற்றில் தண்ணீர் குறைவாக உள்ள இந்த நேரத்தில் மின்வெட்டால் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பட்டு போகத் தொடங்கிவிட்டன. இதனால் ரூ.40 ஆயிரம் செலவு செய்த தொகை கிடைக்குமா என்று கூட தெரியவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் இருக்கும் எனது குடும்பம் என்னை போன்ற விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க மின் வெட்டு இல்லாமல் தொடர்ச்சியாக மின் வினியோகம் செய்ய வேண்டும்.
மும்முனை மின்சாரம் வேண்டும்
ஆதனக்கோட்டையில் ரைஸ் மில் நடத்திவரும் ராஜேஷ்:- நாள் ஒன்றுக்கு சராசரியாக மிளகாய், மல்லி, கோதுமை, அரிசி மாவு, நெல் அரைப்பதற்கும், எண்ணெய் ஆட்டுவதற்கும் என ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரம் வரை அரவைக்கு கூலி கிடைக்கும். தற்போது சில வாரங்களாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் ரூ.1,500-ல் இருந்து ரூ.2000-க்கு கூட எங்களால் அரவை செய்ய முடியவில்லை. இதற்கு முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டாலும், நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததும் தான் காரணம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் மாவுகளை அரைத்துக் கொடுக்க முடியாமலும் சில நேரங்களில் அரைத்து கொண்டிருக்கும் போதே மின்வெட்டு ஏற்பட்டால் எப்போது மின்சாரம் வரும் என காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகையால் மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை குறிப்பிட்டு வரையறுக்கப்பட்ட நேரத்தில் வழங்கிடவும், மின்வெட்டு ஏற்படாதவாறும் கூடுதலான நேரம் மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும்.
தூக்கமின்றி சிரமம்
குப்பையன்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி வேலம்மாள்:- அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் இரவு நேரங்களில் சமையல் செய்ய முடியாமலும், பள்ளிக்கு செல்லும் எங்களது குழந்தைகள் படிக்க முடியாமலும், வீட்டுப்பாடத்தை செய்யமுடியாமலும் தவிக்கின்றனர். இரவில் மின்விசிறி இயங்காமல் குடும்பத்தில் உள்ள பெரியவர் முதல் குழந்தைகள் வரை நாள்தோறும் சரிவர தூக்கமின்றி சிரமப்பட்டு வருகின்றோம். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப டிபன் செய்ய சட்னி கூட அரைத்துகொடுக்க முடியவில்லை. ஆகையால் மின்சாரத்தை தடையின்றியும் குறிப்பாக இரவில் மின்வெட்டு இல்லாமல் வினியோகம் செய்ய வேண்டும்.
சீராக வாய்ப்பு
தொடர் மின்வெட்டு குறித்து புதுக்கோட்டை கண்காணிப்பு பொறியாளர் கூறுகையில்:- எந்திர கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி குறைந்து விட்டது. மின் பற்றாக்குறையை போக்க தற்போது கிராமப்புற பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் தற்போது உற்பத்தியாகின்ற மின்சாரத்தை கொண்டு பகிர்ந்து வழங்கப்படுவதால் இந்த மின்வெட்டு நிலவுகின்றது. படிப்படியாக நாளடைவில் மின் வினியோகம் சீராக வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.