< Back
மாநில செய்திகள்
பாசன வாய்க்கால்களை தூர்வாராததால் வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள்
கடலூர்
மாநில செய்திகள்

பாசன வாய்க்கால்களை தூர்வாராததால் வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள்

தினத்தந்தி
|
23 Oct 2022 6:45 PM GMT

விருத்தாசலம் பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வாராததால் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் அருகே மணிமுக்தாற்றின் குறுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அணைக்கட்டு அமைக்கப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் கார்குடல், ஆதனூர், குமாரமங்கலம், கோபாலபுரம், கம்மாபுரம், விளக்கப்பாடி, தர்மநல்லூர், கீழப்பாளையூர், தொழுர், தேவங்குடி, காவனூர், பவழங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாய்க்கால்கள் தூர்ந்துபோய் காணப்படுவதால் அதன் வழியாக தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வாய்க்கால் இருப்பதே தெரியாத அளவுக்கு முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக சம்பவ பருவத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக மணிமுக்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், வி.குமாரமங்கலம் அணைக்கட்டில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆற்றில் பெருக்கெடு்த்து ஓடிய தண்ணீர் கடலில் கலந்து வீணானது.

பெலாந்துறை அணைக்கட்டு

இதேபோல் வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பெலாந்துறை அணைக்கட்டுக்கட்டுக்கு வரும். அங்கிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த பாசன வாய்க்கால்களும் சரிவார தூர்வாரப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பாசன வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் வாய்க்கால் தூர்வாரப்படாததால், தண்ணீர் சீராக செல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

வெலிங்டன் ஏரி

வெலிங்டன் ஏரி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

இது குறித்து சொட்டவனம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜதனபாண்டியன் கூறியதாவது:- விருத்தாசலம் அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால், அவை நீர்நிலைகளுக்கு சீராக செல்லாமல் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் வீணாகி வருகிறது. மேலும் குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீரை நீர் நிலைகளில் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள்து. இதை தவிர்க்க பாசன வாய்க்கால்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைமடை பகுதிகள்

ஆலந்துறைப்பட்டு விவசாயி மணிகண்டன் கூறியதாவது:- திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்கால்கள் மூலம் கடைமடை பகுதிகளான கருவேப்பிலங்குறிச்சி, நேமம், கார்மாங்குடி, வல்லியம், சக்கரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு கடந்த காலங்களில் தண்ணீர் வரும். இதன் மூலம் அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் வெலிங்கடன் ஏரியில் தண்ணீர் பிடிப்பு நிரந்தரம் இல்லாமல் போனதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதையடுத்து தீவளூர் கிராமத்தின் வழியே சின்னோடையில் வரும் வெலிங்கடன் ஏரியை தடுப்பணை கட்டி சேமித்து அதில் இருந்து வாய்க்கால் வெட்டி பேரளையூர் கிராமத்தில் கொண்டு வந்து வெலிங்கடன் ஏரி தண்ணீரை சேர்த்தனர். நாளடைவில் வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வரத்து நின்று போனது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள எந்த ஏரி, குளங்களுக்கும் வெலிங்டன் ஏரி தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெலாந்துறை அணைக்கட்டு

வண்ணாங்குடிகாடு மணிகண்டன்:- கருவேப்பிலங்குறிச்சி அருகே வெள்ளாற்றின் குறுக்கே பெலாந்துறையில் கட்டப்பட்ட அணைக்கட்டில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் டி.வி.புத்தூர், வண்ணான்குடிகாடு, ராஜேந்திரப் பட்டினம், ஸ்ரீமுஷ்ணம் வழியாக பாளையங்கோட்டை ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்கால் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பாசன வசதியை கொடுப்பதுடன், ஏரி, குளங்களையும் நிரப்பி செல்கிறது. ஆனால் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல முடியாமல் மழைக்காலங்களில் வரும் மழைநீர் ஆங்காங்கே விவசாய விளைநிலங்களிலும், கிராம குடியிருப்புபகுதிகளிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் இந்த வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வண்ணாங்குடிகாடு கிராமத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்