< Back
மாநில செய்திகள்
பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பது எப்படி?    விவசாயிகளுக்கு, வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு, வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

தினத்தந்தி
|
3 Nov 2022 12:15 AM IST

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் நெற்பயிரானது தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளது. இதனால் பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. நிலத்தில் அதிக நாட்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் மண்ணில் காற்றோட்டம் மற்றும் நுண்ணுயிர்களின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மண்ணில் உள்ள முக்கிய சத்துக்களான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துகளை எடுத்துக் கொள்ள முடியாமல், சத்து பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

சத்து குறைபாடு

மண்ணில் உள்ள முக்கிய சத்துக்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்படலாம். அதனால் பயிர்களுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காமல் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதனை நிவர்த்தி செய்ய தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி, வயலில் அதிகமாக உள்ள தண்ணீரை உடனடியாக வடிய வைக்க வேண்டும்.

முதிர்வடையாத பயிர்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் மேல்புறமாக 22 கிலோ யூரியாவுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 17 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். மண்ணில் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்சல்பேட், 150 கிராம் காப்பர்சல்பேட் மற்றும் 100 கிராம் போராக்ஸ் கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும்.

நேரடி நெல் விதைப்பு

மேலும் பேசிலஸ் சப்டிலிஸ் ஏக்கருக்கு ஒரு கிலோ அளிப்பதன் மூலம் நெற்பயிரில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம். நெற்பயிர்கள் முழுவதுமாக அழிந்து விட்டால் குறுகிய கால ரகத்தினை கொண்டு நேரடி நெல் விதைப்பினை மேற்கொள்ளலாம்.

மழைக்கால நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் வராமல் தடுக்க காப்பர் ஹைட்ராக்சைடு 2 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வெப்பம் குறையும் போது இலை சுருட்டு புழுக்கள் தாக்குதல் அதிகம் வர வாய்ப்புள்ளது. இதை தடுக்க குளோரான்டிரனிப்ரோல் என்ற மருந்தை ஏக்கருக்கு 60 மில்லி அளவிற்கு 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வாழை

வாழை பயிருக்கு சரியான வடிகால் வசதி செய்து தர வேண்டும். தண்ணீர் அதிக நாள் தேங்காதவாறு வடிகால் ஏற்படுத்த வேண்டும். மழை ஓய்ந்ததும் தண்ணீரை வடியவைத்து களைக்குத்து மூலம் மண்ணை கிளறி விட வேண்டும். அப்போது தான் மண்ணில் காற்றோட்டம் மற்றும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் வாழைமரம் சாயாமல் இருக்க வலுவான குச்சிகள், கயிறுகளைக் கொண்டு வாழை சாயாதவாறு முட்டுக்கொடுத்து கட்ட வேண்டும். மழைக்காலத்தில் நோய் வர வாய்ப்பு உள்ளதால் வருமுன் காப்போம் விதிப்படி வாழையில் பேசிலஸ் சப்டிலிஸ் அளிக்க வேண்டும்.

மரவள்ளி

மரவள்ளி பயிர் சாகுபடி நிலத்தில் தொடர்ந்து மழைநீர் தேங்கினால் கிழங்கு அழுகுதல் மற்றும் சத்து பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் வரும். கிழங்கு அழுகல் நோய் வராமல் தடுக்க பேசிலஸ் சப்டிலிஸ் உயிரியல் கொல்லியை ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போட வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் கிழங்கு அழுகல் நோய் பரவாமல் தடுக்க கார்பன்டாசிம் ஒரு கிராம், ஒரு லிட்டர் நீரில் கலந்து, நீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் ஊற்ற வேண்டும்.

கரும்பு பூஸ்டர்

கரும்பு பயிரில் அதிகளவு நீர் தேங்கி இருந்தால் மழை முடிந்தவுடன் நீரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கரும்பு பூஸ்டரை இலை வழியாக தெளித்து கரும்புக்கு ஊட்டச்சத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்.

மழை நின்றவுடன் தென்னை மரத்தை சுற்றி தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றி நோய் பரவாமல் இருக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம், ஒரு லிட்டர் நீரில் கலந்து தென்னை மரத்தை சுற்றிலும் ஊற்ற வேண்டும்.

உளுந்து

உளுந்து விதைத்த நிலத்தில் கண்டிப்பாக அதிக நாள் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேசிலஸ் சப்டிலிஸ் ஒரு கிலோ, டிரைகோ டெர்மா விரிடி ஒரு கிலோ ஆகியவற்றை தொழு உரத்தில் கலந்து மண்ணில் போட வேண்டும். விதைக்காமல் இருப்பவர்கள் உளுந்து விதையை உயிரியல் பூசணிக்கொல்லியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

காய்கறி பயிர்களுக்கு நல்ல வடிகால் வசதி தேவை. பார் அமைத்து காய்கறி பயிர்களை நடவு செய்தால் எளிதாக மழை நீரை வடியவைத்து விடலாம். நோய் பரவாமல் தடுக்க பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம், ஒரு லிட்டர் நீரில் கலந்து மண்ணில் தொழு உரத்துடன் கலந்து போட வேண்டும்.

வெங்காயம்

மழைக்காலத்தில் வெங்காயம், மஞ்சள் பயிரில் நோய் வராமல் தடுக்க புரோபிகோனசோல் என்ற பூசணக்கொல்லி மருந்து ஒரு மில்லி லிட்டரை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மலர் பயிரில் நோய் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த பேசிலஸ் சப்டிலிஸ் ஒரு கிலோ என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் போட வேண்டும்.

மேலும் செய்திகள்