< Back
மாநில செய்திகள்
பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Nov 2022 9:55 PM IST

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் சூழலில், சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல்லாயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பயிர்க் காப்பீடு செய்வது அவசியமாகும். ஆனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் மின்சாரம் தடைபட்டு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலஅவகாசத்தை இம்மாத இறுதிவரை நீட்டிப்பது அவசியமாகும் (இப்போதுள்ள நிலையில் நாளை, நவம்பர் 15 தான் பயிர்காப்பீடு செய்ய இறுதி நாளாகும்) குறிப்பாக, சம்பா பயிர்க் காப்பீட்டிற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும். தொடர் மழையால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்