< Back
மாநில செய்திகள்
சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்

தினத்தந்தி
|
13 Oct 2022 7:43 PM GMT

நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாள் என்று பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கூறி உள்ளார்.

நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாள் என்று பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்காப்பீடு

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஆயிரம் எக்டேருக்கு மேல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இயல்பாக சம்பா பருவத்தில் 5 ஆயிரத்து 700 எக்டேருக்கு மேல் நடவு மேற்கொள்ளப்படும். 2022-2023-ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டம் நடப்பு சம்பா பருவத்திற்கு தொடங்கிவிட்டது. நடப்பாண்டில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்திற்கு ரிலையன்ஸ் பொதுக் காப்பீடு நிறுவனத்தின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

நடப்பு சம்பா பருவத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்து 900 செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.539 ஆகும். சம்பா பருவத்திற்கு பயிர்க் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி ஆகும்.

ஆவணங்கள்

கடைசி நேரத்தில் அவசரமாக விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதை தவிர்த்து நடவு முடிந்தவுடன் காலத்தே பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர்க்காப்பீடு செய்ய உள்ள விவசாயிகள் நடவு முடிந்தவுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விதைப்புச் சான்று, அடங்கல் சான்று (பசலி 1432-ம் ஆண்டு) ஆகியவற்றையும் ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றையும் இணைத்துக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கடன் பெற்ற வங்கிகள் மூலமாக விருப்பத்தின் பெயரில் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ மற்றும் இ சேவை மையத்தின் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பயிர்க்காப்பீடு செய்யும் போது தங்கள் கிராமத்தின் பெயர், பயிரிடப்பட்டுள்ள பயிர், புல எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சரிபார்த்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

பிரீமியம்

பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதை தாங்கள் காப்பீடு செய்த இ-சேவை மையத்திலோ, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க மையத்திலோ பெற்றுக்கொள்ள வேண்டும். பயிர்க்காப்பீடு செய்யும்போது ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் பயிர்க்காப்பீடு செய்ய கடைசி தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு தாங்கள் பதிவு செய்த இடத்திற்கு சென்று தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது ஒரு நகல் எடுத்து விவசாயிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்