நாமக்கல்
ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் விவசாயிகள் கரும்பு பயிரை காப்பீடு செய்ய வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
|நாமக்கல் மாவட்ட விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரும்பு பயிர்
நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு ரபி பருவத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்பு பயிரினை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
கரும்பு பயிருக்கு பிரிமிய தொகையாக ஏக்கருக்கு 2,840 ரூபாய் 50 காசுகளை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்யலாம்
கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் முன்பு முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.