< Back
மாநில செய்திகள்
பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 Aug 2023 12:04 AM IST

பயிரை சேதப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் 2-ம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்கள் வழியாக பரவனாறு கால்வாய் மறுஅமைப்பு பணி நடந்தபோது, விளைநிலத்தில் உள்ள பயிர்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இதற்கிடையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி., நிர்வாகம் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் உள்ளதால், அந்த நிலத்தை திருப்பித் தர வேண்டும் என்று விவசாயி முருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஏன் என்.எல்.சி. நிர்வாகம் வேலி அமைத்து பாதுகாக்கவில்லை? அதே நேரம், அறுவடை செய்ய இருந்த பயிரை அழித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். செப்டம்பர் 15-ந்தேதிக்குள் அறுவடையை முடித்து விட்டு, நிலத்தை என்.எல்.சி., நிர்வாகத்திடம் நில உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து இருதரப்பும் பிரமாண மனுவை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்.எல்.சி. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 'சேதம் அடைந்த பயிருக்காக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க என்.எல்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தொகையை காசோலையாக கடலூர் சிறப்பு தாசில்தாரிடம் உடனே ஒப்படைக்கப்படும். சம்பந்தப்பட்ட விவசாயிகள் அவரிடம் பெற்றுக் கொள்ளலாம்'' என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.பாலு, 'இந்த தொகை போதாது. அறுவடை நடைபெறும் நேரத்தில் பயிர்களை அழித்து விட்டனர். அதனால், ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்துக்குரிய இழப்பீடும் இதுவரை பலருக்கு வழங்க வில்லை' என்றார்.

அதற்கு நீதிபதி, 'நிலம் கையகப்படுத்தி விட்டால், அதை பாதுகாக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்த நிலம் சும்மா கிடந்தால், அதன் முன்னாள் உரிமையாளர் அதில் பயிரிடத்தான் செய்வார்கள். விவசாயிகளின் மனநிலை அப்படித்தான் இருக்கும்' என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், '2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் யாரும் விவசாயம் செய்யக்கூடாது என்று தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதன்பின்னர் பயிரிட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, நிலம் கையகப்படுத்தப்பட்டு பின்னர், அதை முன்னாள் உரிமையாளர் பயன்படுத்தினால், அது அத்துமீறல் ஆகும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''விவசாயிகள் தரப்பில் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் இழப்பீடு கேட்கப்படுகிறது. என்.எல்.சி., நிர்வாகம் ரூ.30 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. எனவே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இந்த தொகைக்கான காசோலைகளை கடலூர் சிறப்பு தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இந்த இழப்பீடு தொகையை 6-ந்தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலத்தில் மீண்டும் விவசாயிகள் பயிரிடக்கூடாது. நிலத்தை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் ஒப்படைத்து விட வேண்டும். அதன் பின்னர், கால்வாய் பணிகளை என்.எல்.சி., நிர்வாகம் மேற்கொள்ளலாம். இந்த விவகாரத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை இனி யாரும் ஏற்படுத்தக்கூடாது. மீறி யாராவது செயல்பட்டால், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

கோர்ட்டில் சிரிப்பலை

ரூ.40 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயம் செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்த உடன், மனுதாரர் வக்கீல் கே.பாலு, நெல் விதைத்ததற்கு தக்காளி விதைத்திருந்தால், கூடுதலாக இழப்பீடு கிடைத்து இருக்கும் என்றார். அதற்கு நீதிபதி, அப்படி தக்காளி விதைத்து இருந்தால், அதை அரசே கொள்முதல் செய்திருக்கும் என்றார். அப்போது அங்கிருந்த அரசு தரப்பு வக்கீல் ஒருவர், 'இவர்கள் தக்காளி எங்கே விதைப்பார்கள். மாம்பழத்தைத்தான் விதைப்பார்கள்'' என்றதும், கோர்ட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

மேலும் செய்திகள்