< Back
மாநில செய்திகள்
பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை
சென்னை
மாநில செய்திகள்

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை

தினத்தந்தி
|
30 Aug 2023 6:54 AM IST

தாம்பரம் அருகே பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் முதலை மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம்,

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல் (வயது 48). தொழிலதிபரான இவர், மறைந்த பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார். மேலும், இவர் பா.ஜ.க.வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

இவர் மனைவி, 2 வயது மகனுடன் பங்களா வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது நீச்சல் குளத்தின் உள்ளே சுமார் 1½ அடி நீளமுடைய முதலைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த பூங்கா ஊழியர்கள் முதலைக்குட்டியை மீட்டு பூங்காவுக்கு கொண்டு சென்றனர். வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும்போது, நீச்சல் குளத்தில் விழுந்திருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்