உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் குறித்து விமர்சனம்: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில்
|பூதக்கண்ணாடி கொண்டு திமுக ஆட்சி மீது குறை சொல்ல பார்க்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
சென்னையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "துணை முதல்-அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அரசு விழாக்களுக்கு திமுக சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து வருகிறார். அவ்வாறு அதிகாரிகள் டி-சர்ட் அணிந்து வந்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த விமர்சனத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது சொந்த பணத்தில் வாங்கிய டி-சர்ட்டை அணிந்திருக்கிறார். அந்த டி-சர்ட் யாரையும் துன்புறுத்தும்படியாகவோ, யார் மீதும் குற்றச்சாட்டு சொல்லும்படியாகவும் இல்லை.
75 ஆண்டுகள் இந்த மண்ணில் திமுகவை தட்டி எழுப்பிய உதயசூரியன் சின்னமும், திமுக கொடியையும் தான் அந்த டி-சர்ட்டில் லோகோவாக இருக்கிறது. இதில் கூட குற்றம் பார்த்து, பூதக்கண்ணாடி கொண்டு தேடி பார்த்து இந்த ஆட்சி மீது குறை சொல்ல பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.