அண்ணா குறித்து விமர்சனம்: அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது -சீமான் பேட்டி
|அண்ணா குறித்து விமர்சனம் செய்த அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது என்று சீமான் தெரிவித்தார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன் என்பதால் தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் போட்டியிடுவேன். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்டு, கங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் எதிராக இருக்கிறது. டெல்லி, பஞ்சாப்பில் கெஜ்ரிவால் காங்கிரசை எதிர்க்கிறார். ஆனால் இந்தியா என்ற கூட்டணியில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் இந்த கூட்டணி வேடிக்கையானதாக இருக்கிறது.
முதல்-அமைச்சரின் கருத்து என்ன?
பேரறிஞர் அண்ணாவை பற்றி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து என்ன?, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்து இருப்பார்கள்.
ஆனால் அண்ணாவை கொடியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று குரல் கொடுத்து இருக்கிறது. இதில் அ.தி.மு.க.வின் செயல்பாடு பாராட்டுக்குரியது. எடப்பாடி பழனிசாமி இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் 2-ம் கட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது.
சண்டைக்கு போக மாட்டேன்
வீரலட்சுமியின் கணவருடன் குத்துச்சண்டைக்கு நான் செல்ல நேரம் ஒதுக்கி உள்ளதாக கேள்விப்பட்டேன். புலியை பூனை சண்டைக்கு கூப்பிட்டால் அது போகுமா?, நான் புலி, பூனையுடன் சண்டைக்கு போக மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.