< Back
மாநில செய்திகள்
அமித்ஷா உடனான சந்திப்பை விமர்சிப்பதை ஏற்க முடியாது -ஜெயக்குமார் பேட்டி
மாநில செய்திகள்

அமித்ஷா உடனான சந்திப்பை விமர்சிப்பதை ஏற்க முடியாது -ஜெயக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
28 April 2023 6:55 PM GMT

மத்திய மந்திரி அமித்ஷா உடனான சந்திப்பை விமர்சனம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கிறது. பொதுச்செயலாளர் பொறுப்பு ஏற்ற பிறகு மரியாதை நிமித்தமாக உள்துறை மந்திரியை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறார். தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 'மினி' அவசர நிலை பிரகடனம் செயல்படுத்தப்படுகிறது. பேச்சுரிமை இல்லை. கருத்து சுதந்திரம் இல்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 கொலைகள் நடந்திருக்கிறது. மணல் மாபியாக்கள் கொடி கட்டி பறப்பதற்கு, வி.ஏ.ஓ. வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமே சாட்சி.

இதைப்பற்றியெல்லாம் உள்துறை மந்திரியிடம் கூறியிருக்கிறோம். ஊடகத்துக்கு கூட பாதுகாப்பு கிடையாது. 'ஜி ஸ்கொயர்' அலுவலகத்தில் நடந்த சோதனையை படம் பிடித்தவர் அடித்து, உதைக்கப்பட்டார். எந்த காலத்திலும் இதுபோன்று நடந்தது கிடையாது. தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழல் பற்றியும் உள்துறை மந்திரியிடம் எடுத்து சொல்லியிருக்கிறோம். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாடல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினோம். உள்துறை மந்திரியும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். சொத்து குவித்துள்ள அமைச்சர்களின் பட்டியலையும் உள்துறை மந்திரியிடம் கொடுத்திருக்கிறோம். அவர்களை விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

முற்றுப்புள்ளி

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு. மத்திய மந்திரி அமித்ஷா உடனான சந்திப்பை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்கவேண்டும். இல்லையென்றால் அதுகுறித்து அடுத்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கவேண்டியது வரும். தோழமை கட்சி என்ற அடிப்படையில் 4 பேர் உள்துறை மந்திரியை சந்தித்தோம். ஆனால் அதன் பிறகு மத்திய மந்திரியை சந்தித்தது தொடர்பாக விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அண்ணாமலை. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய உண்மையை சி.பி.ஐ.யோ, அமலாக்கத்துறையோ நடவடிக்கை எடுத்து சட்டத்துக்கு முன் நிறுத்தவேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி ஊழலுக்கு, வாய் மூடி மவுனமாக இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

கட்சியும், ஆட்சியும் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. திருநெல்வேலியில் ஆளுங்கட்சி மேயரை எதிர்த்து, அந்த கட்சி உறுப்பினர்களே கலாட்டா செய்கிறார்கள். சபையையே நடத்த விடவில்லை. எங்கேயும் இதுபோன்று நடக்காது. ஒரு குடும்பத்துக்கு வருமானம் செல்லவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்களை அனுமதிக்கிறார்கள். இனி வரும் காலங்களில் நடமாடும் வண்டிகளில் மதுபானம் எடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துவிடுவார்கள். தமிழக மக்கள் ஒருபோதும் தி.மு.க.வை ஏற்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதிப்பு

தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு இப்படி எல்லா வகையிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்படி பாதிப்புகள் இருக்கும்போது, மக்களுக்கு பணத்தை கொடுத்து மாற்றிவிட முடியுமா? மக்களுடைய பாதிப்புக்கு விடை என்பது, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்பதும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்பதும்தான்.

இதுதான் மக்களின் எண்ணம். லண்டனில் இருப்பவரையும், அமெரிக்காவில் இருப்பவரையும் அழைத்து வந்து தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்று சொல்கிறார்களே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வெளிநாட்டு கம்பெனியை வைத்தா அரசியல் நடத்தினார்கள்? அறிவுப்பூர்வமாக சிந்தித்தார்கள். ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வந்தார்கள். மக்களுடைய அங்கீகாரத்தை பெற்றார்கள். அதனால் இப்போது மகத்தான இயக்கமாக இருக்கிறோம். ஆனால் இப்போது அறிவை கூட விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதுதான் இப்போதைய தமிழகத்தின் துர்பாக்கிய நிலை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்