< Back
மாநில செய்திகள்
கேரள போலீசாரிடம் இருந்து தப்பிய குற்றவாளி கடையத்தில் கைது
தென்காசி
மாநில செய்திகள்

கேரள போலீசாரிடம் இருந்து தப்பிய குற்றவாளி கடையத்தில் கைது

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

கேரள போலீசாரிடம் இருந்து தப்பிய குற்றவாளி கடையத்தில் கைது செய்யப்பட்டார்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாலமுருகன் (வயது 33). இவர் தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர். இந்த நிலையில் பாலகிருஷ்ணனை கொள்ளை வழக்கு ஒன்றில் கேரள போலீசார் கைது செய்து, கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி திண்டுக்கல் பகுதியில் கொண்டு வந்தனர். அப்போது போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அவர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து கேரள, தமிழக போலீசார் பாலமுருகனை சென்னை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் கடையம் ராமநதி அணை வனப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் ஆகியோரின் உத்தரவுப்படி, கடையம் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேஷகிரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மொட்டையடித்து மாறுவேடத்தில் பதுங்கியிருந்த பாலமுருகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது கைதாகி உள்ள பாலமுருகன் இதற்கு முன்பு கடையம் கல்யாணிபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்றபோது, அந்த தம்பதியினரால் அவர் விரட்டி அடிக்கப்பட்டார். இதையடுத்து அந்த தம்பதிக்கு அரசு வீரத்தம்பதியினர் பட்டம் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்