< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
30 Nov 2022 6:28 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது! எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத்தை கொலைக்குற்றமாகவும், கூட்டு சதியாகவும் பார்க்க வேண்டும். அதற்கான தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இதை சாதாரண விதிமீறலாக மட்டும் கருதி துறை சார்ந்த நடவடிக்கையை மட்டும் அரசு மேற்கொள்வதை ஏற்க முடியாது!

சாத்தான்குளம் காவல்நிலைய மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அதை விட கொடுமையான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது!

எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்