< Back
மாநில செய்திகள்
கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க போராடிய வக்கீல் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியாது -ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க போராடிய வக்கீல் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியாது -ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
26 Sept 2023 12:21 AM IST

கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க கடுமையாக போராடிய வக்கீல் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்று கூறி வக்கீல் மீது பதிவான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் நிலத்தை வருவாய் ஆய்வாளர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அளவிடும் பணியில் ஈடுபட்டார். அப்போது தன் கட்சிக்காரர் சார்பில் அங்கு வந்த வக்கீல் ராஜா என்பவர், வருவாய் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததாக கொளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சி.ராஜா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வித்தியாசமான நடத்தை

இந்த நிலம் தொடர்பாக தன் கட்சிக்காரர் சார்பில் மேட்டூர் முன்சீப் கோர்ட்டில் மனுதாரர் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தன் கட்சிக்காரரின் நலனை பாதுகாக்க அவர் முயற்சித்தபோது, இந்த வழக்கு அவர் மீது பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

பொதுவாக சாதாரண மக்களின் நடத்தையைவிட வக்கீல்களின் நடத்தை எப்போதும் வித்தியாசமாகத்தான் இருக்கும். அவர்களது பதவி, பணியின் தன்மையை கருத்தில்கொள்ளும்போது, அவர்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஆரவாரமாக செயல்படுகின்றனர். தன் கட்சிக்காரர்களுக்காக இப்படி ஒரு தன்மையை வக்கீல்கள் தங்கள் தொழில் மூலம் வளர்த்துள்ளனர்.

ஆக்ரோச செயல்பாடு

தன் கட்சிக்காரர்களின் உரிமைக்காக கடுமையாக போராடும் வக்கீல்கள், கோர்ட்டுக்கு வெளியில் மிகவும் ஆக்ரோசமாக செயல்பட முனைகின்றனர். வக்கீலான மனுதாரர் தன் கட்சிக்காரரின் உரிமையை பாதுகாக்க கடுமையாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற செயலுக்காக வக்கீல் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. மனுதாரரின் முக்கிய நோக்கமே தன் கட்சிக்காரரின் உரிமையை பாதுகாப்பதுதானே தவிர, அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பது இல்லை.

ரத்து

வக்கீலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதால், அதில் இந்த கோர்ட்டு தலையிட வேண்டியதுள்ளது. எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்