< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

தினத்தந்தி
|
6 Sept 2024 8:06 PM IST

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழாவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

பெண்கள் பாதுகாப்பில் அலட்சியப் போக்குடன் செயல்படும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண் ஒருவரை லிப்ட் தருவதாக அழைத்துச் சென்ற இருவர், அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கக் கூடிய புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அப்பகுதி பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலை உருவாகியுள்ளது.

கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கு விசாரணையில் காவல்துறையும், தி.மு.க. அரசு காட்டிய அலட்சியப் போக்கே இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழாவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்