< Back
மாநில செய்திகள்
குற்ற தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

குற்ற தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
30 Aug 2023 12:15 AM IST

சின்னசேலம் மற்றும் திருக்கோவிலூரில் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சின்னசேலம்,

சின்னசேலம் பஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமை தாங்கினார். சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

தொடர்ந்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் கூறுகையில், திருட்டு சம்பவங்களை தடுக்க யாரேனும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றால், வீட்டின் முகவரியை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், போலீசார் அந்த வீட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பார்கள். இதன் மூலம் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் உங்கள் பகுதியில் நின்றால், அது குறித்த தகவலை உடனே போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். இது தவிர வீடுகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். குறிப்பாக வீடு, பீரோ சாவியை மற்றவர்கள் கண்களில் படும் படி வைக்கக்கூடாது என்றனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒலிபெருக்கி மூலம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்