காஞ்சிபுரம்
மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் தகனம் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
|மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் உடல் பலத்த போலீஸ் பாதுபாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). கட்டிட தொழிலாளி. மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களது முதல் மனைவி வெண்ணிலா ( 41). இவரது மகன் கவுதம் ( 19), மகள் லோகராட்சகி (15). சேலம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருகின்றனர். 2-வது மனைவி சித்ரா (39). 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் பிரித்விரூபன். 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகன் பிரித்விரூபனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் அலைந்துள்ளார். ஜாதி சான்றிதழ் வேண்டி தலைமைச் செயலகத்திற்கும் சென்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை இதனால் விரக்தியடைந்த வேல்முருகன்
தனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்துக்கு கடந்த 11-ந் தேதி வந்திருக்கிறார்.
அங்கும் அவருக்கு சரியான உதவி கிடைக்காததால் சென்னை ஐகோர்ட்டில் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு வாயிலில் முன்பாக தன்னுடைய கையில் வைத்திருந்த பெட்ரோலை வேல்முருகன் தனது தலையில் ஊற்றி தீக்குளித்தார். அங்கு இருந்த போலீசார் தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். தீயணைப்பு எந்திரம் மூலம் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். அப்போது வேல்முருகனை காப்பாற்ற முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வேல்முருகனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் கடந்த 12-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேல்முருகனின் உடலை வாங்க மறுத்து அவரது 2-வது மனைவி சித்ரா மகன் பிரித்விரூபன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் சாவுக்கு உரிய இழப்பீடு மற்றும் நீதி கிடைக்கும் வரை அவரது உடலை நாங்கள் வாங்க மாட்டோம். வேல்முருகனின் மகன் பிரீத்தி ரூபனுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். கல்விக்கான முழு செலவை அரசு ஏற்க வேண்டும். ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சேலம் ஆத்தூர் பகுதியில் வசித்து வரும் வேல்முருகனின் முதல் மனைவி உடலை பெற்றுக்கொள்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து போலீஸ் அதிகாரி முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேல்முருகனின் உடல் சிறு மாத்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சாலமங்கலம், படப்பை பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.