< Back
மாநில செய்திகள்
272 புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரம்
சிவகங்கை
மாநில செய்திகள்

272 புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
15 Jun 2022 5:37 PM GMT

272 புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழாவிற்காக 272 புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புரவி எடுப்பு விழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க எம்.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் அமைந்துள்ளது செவுட்டுடைய அய்யனார் கோவில். சூரக்குடியில் அமைந்துள்ளது சிறைமீட்ட அய்யனார் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரவி எடுப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிறைமீட்ட அய்யனார், செவுட்டுடைய அய்யனார் கோவிலுக்கு எம்.சூரக்குடியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட புரவிகள் செல்வது வழக்கம்.

கொேரானா தொற்றால் நிறுத்தப்பட்ட இந்த விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. அதற்காக புரவி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு முன்னதாக கடந்த 3-ந் தேதி குலால வம்சா வழியினரிடம் பிடிமண் வழங்கப்பட்டது.

272 புரவிகள்

அதை பெற்றுக்கொண்ட குலால வம்சா வழியினர் குதிரை சிலை செய்ய நான்கு கரை பங்காளிகள் இணைந்து சுமார் 40-க்கும் மேற்பட்டோர் 272 புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து எம். சூரக்குடி புரவி தயாரிக்கும் பணியில் ஈடுபடும் மணிகண்டன் என்பவர் கூறுகையில், தென் தமிழகத்தில் குறிப்பாக சூரக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சிறைமீட்ட அய்யனார் மற்றும் செவுட்டுடைய அய்யனார் கோவிலுக்கு சுற்றி உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேர்த்தி கடனுக்காக புரவி செய்து சுமந்து சென்று கோவிலுக்கு வழங்குவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு 240 புரவிகள் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கொேரானா தொற்றால் 2 ஆண்டுகளாக விழா தடைபட்டது.

இந்த ஆண்டு நேர்த்திக் கடனுக்காக சுமார் 270 மற்றும் அரண்மனை புரவிகள் இரண்டு என மொத்தம் 272 புரவிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 272 புரவிகள் செல்வது செவுட்டுடை அய்யனார் கோவிலுக்கும், சிறைமீட்ட அய்யனார் கோவிலுக்கு மட்டுமே.

நேர்த்திக்கடன்

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பலவண்ண வர்ணம் பூசப்பட்ட புரவிகள் கிராம பெரியவர்கள் முன்னிலையில் சாமி அழைத்து புரவி பொட்டலில் இருந்து எம்.சூரக்குடி மையப்பகுதியில் உள்ள கச்சேரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் புரவி பொட்டலிருந்து பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டு அரண்மனை புரவிகள் 2 மற்றும் அதனுடன் நேர்த்திக்கடன் புரவிகள் என மொத்தம் 272 புரவிகள் செவுட்டுடைஅய்யனார் கோவிலுக்கும், சிறை மீட்ட அய்யனார் கோவிலுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எம்.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்