ஆக்கப்பூர்வமான பணிகளை கிராமசபைகளில் முன்னெடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
|வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில், கிராமங்களே முன்னிலை வகிக்கின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். தமிழ்நாட்டில் சோழர் காலம் முதலே கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. கிராமசபை கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவைகள் குறித்து விவாதிக்கின்றனர். ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என்று அதிகரித்துள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகே கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகின்றன.
கிராம ஊராட்சி திட்டங்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில், கிராமங்களே முன்னிலை வகிக்கின்றன. கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் தடையின்றி ஒலிக்க வேண்டும். கிராம சபை கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக உள்ளது. ஆக்கப்பூர்வமான பணிகளை கிராமசபைகளில் முன்னெடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி, முதியோர், குழந்தைகள் நலனில் கிராம சபைகள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். கல்விக்காக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கிராம சபைகள் பாலமாக அமைய வேண்டும். மகளிர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் அதிக அளவில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் அனைவரது கருத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.