< Back
மாநில செய்திகள்
வெடி விபத்தால் வீடுகளில் விரிசல்
அரியலூர்
மாநில செய்திகள்

வெடி விபத்தால் வீடுகளில் விரிசல்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:52 AM IST

அரியலூர் அருகே நடந்த வெடி விபத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் கேட்டு மக்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

வெடி விபத்தால் வீடுகள் சேதம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. வெடிகள் மொத்தமாக வெடித்தபோது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக சுற்றுப்பகுதியில் இருந்த குடியிருப்புகளின் ஆஸ்பெட்டாஸ் சீட் சிமெண்டு கூரை உடைந்து சேதம் அடைந்தன.

மேலும் வீட்டின் சுற்றுச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கூரை வீட்டின் மீது பறந்து வந்து விழுந்த தீப்பொறியால் அந்த வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தண்ணீரை உற்றி தீயை அணைத்துள்ளனர். இதனை யாரேனும் கவனிக்காமல் இருந்திருந்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஓடுகள் உடைந்தன

இந்த நிலையில் நேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் தாங்கள் வசித்து வந்த வீடுகள் பாதிப்படைந்ததால் தவிக்கும் இப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாது:-

விரகாலூரை சேர்ந்த மீனா:- வெடி விபத்து ஏற்பட்டபோது நான் வீட்டில் இல்லை, அருகேயுள்ள பள்ளிக்கு வேலைக்கு சென்றிருந்தேன். எனது குழந்தைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர்.

வீட்டிற்குள் வந்து பார்த்தபோது ஓடுகள் உடைந்து கீழே விழுந்து கிடந்தன. அந்த நேரத்தில் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து இருந்தால் என்ன ஆகியிருக்குமோ?. நாங்கள் கூலி வேலை செய்பவர்கள் தான் உடைந்த ஓடுகளை சரிசெய்யும் அளவிற்கு தற்போது வசதியில்லாத நிலையில் தவித்து வருகிறோம். தற்போது உள்ள சூழ்நிலையில் திடீரென மழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும் நிலை உள்ளது. சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய தமிழக அரசு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும்.

வெளியே படுத்து உறங்கினோம்

சந்தியா:- நாங்கள் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் 8 பேர் தங்கியுள்ளோம். நேற்று முன்தினம் நான் குழந்தையுடன் வீட்டில் இருந்தேன். மற்றவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டபோது வீட்டின் ஓடுகள் உடைந்து என் மீது விழுந்தன. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினேன். அப்போது கீழே விழுந்து எனது காலில் காயமும் ஏற்பட்டுவிட்டது. திரும்பி வந்து பார்க்கையில் ஓடுகள் உடைந்தும் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் இருந்தது. இந்த அளவிற்கு பாதிப்படைந்து ஆபத்தாக மாறியுள்ள வீட்டில் எப்படி வசிப்பது? எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். இதனாலேயே நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தூங்கினோம். தற்போது வருமையில் வாடும் எங்களால் வீட்டை சரிசெய்ய முடியாமல் என்ன செய்து என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டு எங்களை போன்று தவிக்கும் மக்களுக்கு வீடுகளை சரிசெய்து கொடுத்து உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்