< Back
மாநில செய்திகள்
பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 6:45 PM GMT

பொறையாறு அருகே வெடிவிபத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு வெடித்து 4 பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் வெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்(வயது 32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த மதன்(22), கல்லூரி மாணவர் நிகேஷ்(21), ராகவன்(23) ஆகியோர் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

மேலும் படுகாயம் அடைந்த மணிவண்ணன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியிலும், பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் ஆகிய 3 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உரிமையாளர் கைது

இந்த விபத்து தொடர்பாக பொறையாறு போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மோகன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின் பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு பட்டாசு ஆலை உரிமையாளர் மோகனை(49) நேற்று கைது செய்தனர்.

உறவினர்கள் போராட்டாம்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யவிடாமல் உறவினர்கள், அரசியல் கட்சியினர் 15 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் வருவாய்த்துறையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அரசு வேலை பெற்று தருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட மாணிக்கம் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

தொடர்ந்து அடையாளம் தெரியாமல் சிதைந்த உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு சட்டம் சார்ந்த மருத்துவ துறை சிறப்பு டாக்டர் நவீன், உதவி பேராசிரியர் ஹரிபிரசாத், தஞ்சை தடயவியல் உதவி இயக்குனர்(பொறுப்பு) ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை 6 மணி அளவில் அனைவருடைய உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்