< Back
மாநில செய்திகள்
பட்டாசு ஆலை வெடி விபத்து:  நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
5 March 2023 11:29 PM IST

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமதி மல்லிகா, க/பெ. பூபாலன் (வயது60) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.சுமதி க/பெ.ஐயனார் (வயது 45), திருமதி. பிருந்தாதேவி. க/பெ. இளங்கோவன் (வயது 35), செல்வி. லட்சுமி. த/பெ செல்வம் (வயது 24), செல்வி. செவ்வந்தி, த/பெ.செல்வம் (வயது19), மற்றும் செல்வி. அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (வயது18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்