பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் இரங்கல்
|சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.