பட்டாசு வெடித்து குடிசை வீடு எரிந்த விவகாரம்: பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு
|பட்டாசு வெடித்ததில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது.
நாகப்பட்டினம்,
நாகை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் பிரசாரத்திற்காக நேற்று நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் வந்தபோது பா.ஜக.வினர் பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மள, மளவென எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இது தொடர்பான தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பா.ஜக.வினரை எதிர்த்து பக்கிரிசாமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நிவாரணம் வழங்குவதாக பா.ஜக.வினர் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், பிரசாரத்தின் போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பா.ஜக.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.