< Back
மாநில செய்திகள்
முக்கொம்பு காவிரி பாலத்தில் விரிசல்
திருச்சி
மாநில செய்திகள்

முக்கொம்பு காவிரி பாலத்தில் விரிசல்

தினத்தந்தி
|
28 Oct 2022 2:13 AM IST

முக்கொம்பு காவிரி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜீயபுரம்:

முக்கொம்பு பாலம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் முக்கியமாக விளங்குவது முக்கொம்பு சுற்றுலா மையமாகும். மேட்டூரில் இருந்து ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் வழியாக வரக்கூடிய காவிரி நீரானது அகண்ட காவிரியில் வந்து இந்த பகுதியில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து செல்வது இந்த பகுதிக்கு மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கொள்ளிடம் பாலம் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்த பாலத்தின் 5-வது மதகு முதல் 9-வது மதகு வரையுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டு உள்ளது.

பாலத்தில் விரிசல்

இந்நிலையில் முக்கொம்பில் உள்ள காவிரி பாலமானது 42 மதகுகளை கொண்ட பாலமாகும். இந்த பாலம் கடந்த 1977-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும். இந்த பாலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது இந்த பாலத்தில் 35-வது மதகுப்பகுதியில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தூண் அடிப்பகுதியில் இருந்து விலகி மேற்கு பகுதி நோக்கி சுமார் 25 சென்டிமீட்டர் தூரம் சாய்ந்துள்ளது. இந்த விரிசலானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான அளவில் இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல பாலத்தின் விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆபத்து இல்லை

தற்போது காவிரி மற்றும் கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி பாலம் இடியும் அபாய நிலையில் உள்ளதா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், காவிரி பாலத்தின் 35-வது மதகு பகுதியானது கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த நிலையில்தான் உள்ளது. ஆனால் அடிப்பகுதியில் காப்பர் பீம் போட்டு கட்டப்பட்டிருப்பதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார்.

மேலும் செய்திகள்