< Back
மாநில செய்திகள்
கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது
மாநில செய்திகள்

கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது

தினத்தந்தி
|
2 Nov 2023 12:46 PM IST

போராட்டத்தின்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ந்தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதனை கவர்னர் நிராகரித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் இன்று மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர். இதையடுத்து கவர்னர் பயணம் செய்யும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த நான்கு வழிச்சாலையான கீழக்குயில்குடி பகுதியில் திரண்டு நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை கவர்னரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீசார் தடுத்தனர்.

இதில் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு உருவானது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் கவர்னர் அந்த பகுதியை கடந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்