புதுக்கோட்டை
மின்னல் தாக்கி பசு மாடுகள் செத்தன
|பாக்குடி, இலுப்பூரில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் செத்தன.
பசு செத்தது
விராலிமலை ஒன்றியம், பாக்குடி, நாங்குபட்டி, மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது பாக்குடி ஊராட்சி விட்டாநிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகன் ராமச்சந்திரன் (வயது 35) என்பவர் தான் வளர்த்து வரும் 4 கறவை பசு மாடுகளை அவரது வீட்டின் அருகே உள்ள வயல் காட்டில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது ஒரு மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் அந்த மாடு கீழே சுருண்டு விழுந்து செத்தது. இதை பார்த்த ராமச்சந்திரன் மனைவி பதறி அடித்து கொண்டு மாடு இறந்து கிடந்த இடத்திற்கு சென்று கதறி அழுதார்.
மின்னல் தாக்கியது
இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இருந்திரப்பட்டி, சாங்கிராப்பட்டி, வீரப்பட்டி, ராப்பூசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலையில் இலுப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் ராப்பூசல் அருகே உள்ள விட்டாநிலைப்பட்டியை சேர்ந்த சரோஜா என்பவரின் பசுமாடு மின்னல் தாக்கி பலியானது.