சென்னை
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி பெண் காயம் - ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்
|சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் காயம் அடைந்தார். ஒரே வாரத்தில் இது 2-வது சம்பவம் ஆகும்.
சென்னை திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 51). நேற்று முன்தினம் மதியம் இவர், தனது வீட்டில் இருந்து சுங்குவார் தெரு பாலம் அருகே உள்ள குப்பை தொட்டியில் குப்பையை கொட்டுவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென செல்வியை தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில், அவரது கை மற்றும் கால்களில் அடிபட்டது. அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து மாட்டை விரட்டிவிட்டு செல்வியை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக செல்வியை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்து வந்த மெரினா போலீசார், சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து, அப்பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை வாகனங்கள் மூலம் பிடிக்கும் பணியை முடுக்கிவிட்டனர். இதற்கிடையில் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணியில் ஒரே வாரத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். ஏற்கனவே கடந்த 17-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று 80 வயது வாய் பேச முடியாத முதியவரை முட்டி தூக்கி வீசியது. இதில், பலத்த காயம் அடைந்த முதியவர், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். திருவல்லிக்கேணியில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மாடு முட்டி 2 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பொதுமக்களை மாடுகள் முட்டி, காயப்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஏற்கனவே அரும்பாக்கத்தில் பள்ளி மாணவி, நங்கநல்லூர் பகுதியில் முதியவர் ஆகியோர் மாடு முட்டி காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.