குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
|ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் நியமிக்கும் முறைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருக்கிறது. சமூகநீதியையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் காக்கும் சென்னை ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையான அனைத்து ஓட்டுனர், நடத்துனர்களையும் தனியார் நிறுவனங்கள் மூலம் பெறும்போது, அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது; ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாது என்பதை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். இதையே சென்னை ஐகோர்ட்டும் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது அபாயகரமான சோதனை என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
அரசுத்துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பணியாளர்களை நியமிப்பதில் சமூகநீதிக்கு எதிரான கொள்கையை கடைபிடித்து வருவதை தமிழக அரசு இப்போதாவது உணரவேண்டும். சென்னை ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது. மாறாக தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.