கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
|கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் மூத்த அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
பேரணியின் நிறைவில் முதலில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதனைதொடர்ந்து அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.