அரசியல் அதிகாரத்தின் மூலம் மக்கள் மிரட்டப்படுவதை கோர்ட்டு கைகட்டி வேடிக்கை பார்க்காது - ஐகோர்ட்டு எச்சரிக்கை
|அரசியல் அதிகாரத்தின் மூலம் மக்கள் மிரட்டப்படுவதை கோர்ட்டு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்ற மூதாட்டிக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வீட்டுக்கான வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது வீட்டில் குடியிருப்பதற்கான வாடகையை வழங்க ராமலிங்கத்துக்கு உத்தரவிடக் கோரி கிரிஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு வரை விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ராமலிங்கமும் வீட்டை காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தார். இதையடுத்து, கிரிஜா சென்னை ஐகோர்ட்டில், ராமலிங்கத்துக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் காவல் துறையினர் உதவியுடன் மூதாட்டியின் வீட்டில் இருந்து ராமலிங்கத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமலிங்கத்தை அந்த வீட்டிலிருந்து காலி செய்து, வீட்டின் உரிமையாளரிடம் வீடு ஒப்படைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒப்புக்கொண்ட மூதாட்டி கிரிஜா தரப்பினர், வாடகை பாக்கி இன்னும் தரப்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசியல்வாதிகளின் வார்த்தைகளும் செயல்களும் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதையும் இந்த கோர்ட்டு வேடிக்கைப் பார்க்காது.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலத்துக்காக பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. நில அபகரிப்பு என்பது தற்போது பகல் கொள்ளையாக மாறிவிட்டது. வாடகை பாக்கியை வசூலிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.