வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை வேகமாக அகற்றாவிட்டால் ஆபத்து - ஐகோர்ட்டு எச்சரிக்கை
|தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதுமலை வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான கருத்துரு, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-
அன்னிய மரங்களை அகற்ற அரசு ஏன் தீவிரம் காட்டவில்லை? அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11-ந்தேதி வரை அவகாசம் வழங்குகிறோம்.
வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால், அவை வேகமாக பரவி, மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர்.
பின்னர், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.