< Back
மாநில செய்திகள்
கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

தினத்தந்தி
|
11 Aug 2023 10:10 AM GMT

கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி உத்தரவை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகப்ப முதலியார். அவர் உள்பட 7 பேர் தங்களது நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். இதற்கு இழப்பீடாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் 70 சதவீதம் பணத்தை அரசு வழங்கியுள்ளது. மீதம் ரூ.2.40 லட்சம் பணம் வழங்கப்பட வேண்டும். பாக்கி இழப்பீட்டை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்து உரிய இழப்பீட்டை வழங்கும்படி காஞ்சீபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று கோர்ட்டு ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர், காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஜப்திக்கான உத்தரவை வழங்கினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வட்டாட்சியர் புவனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர்கள் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார். எனவே வட்டாட்சியருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. எனவே கோர்ட்டு ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்