< Back
மாநில செய்திகள்
சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 Sept 2023 6:01 AM IST

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாக பழகி விட்டு, பின்னர் தன்னை சீமான் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.

இதன்படி சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி இந்த புகாரை திரும்ப பெற்று விட்டார். இந்த நிலையில், சீமான், விஜயலட்சுமிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, பழைய குற்றச்சாட்டை மீண்டும் கூறி, 2-வது முறையாக விஜயலட்சுமி புகார் செய்தார். இதையடுத்து மீண்டும் சீமான் மீது மற்றொரு வழக்கை வளசரவாக்கம் போலீசார் பதிவு செய்தனர்.

அரசியல் காரணம்

இதற்கிடையில், இந்த 2-வது புகாரையும் விஜயலட்சுமி திரும்ப பெற்றார். இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதில், "தி.மு.க., அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் தன் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2011-ம் ஆண்டு பதிவான வழக்கில், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பின்னரும், அந்த வழக்கை முடித்து வைக்காமல், போலீசார் நிலுவையில் வைத்துள்ளனர். தற்போது கொடுத்த புகாரையும் விஜயலட்சுமி வாபஸ் பெற்று விட்டார். எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வழக்குகளை போலீசார் விசாரிப்பதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். எனவும் மனுவில் கோரியிருந்தார்.

ஆஜராக வேண்டும்

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, 2011-ம் ஆண்டு அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று போலீஸ் தரப்புக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கேள்வி எழுப்பி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்து பார்த்த நீதிபதி, "இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்